வேலூர் மாவட்டம், அரியூர் ஜெகஜீவன்ராம் தெருவில் வசிக்கும் வளர்மதியின் வீட்டுக்குள் அன்பும் அரவணைப்பும் நிறைந்துள்ளன. ஆனால், அதனை பிணியும் வறுமையும் ஒருசேர இணைந்து அவ்வீட்டின் சந்தோஷத்தை மொத்தமாக தனது கோரப் பிடிக்குள் வைத்துள்ளன. பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்ட தனது 19 வயதே ஆன மகனை வைத்துக்கொண்டுப் போராடி வரும் இந்தத் தாயின் நிலைமையையும் துயரத்தையும் அறிந்தால் கல்லும் கண்ணீர் சிந்தும்.
உடல் மற்றும் மனநிலை குறைபாட்டால் போராடும் மகன் சரண்சங்கீத், பள்ளிக்கு செல்லும் 11 வயது மகள் ரதிகேஷரி ஆகியோரோடு தனது வாழ்க்கையை ஒரு போராட்டம் போலவே வாழ்ந்து கொண்டிருக்கும் வளர்மதியின் துயரத்தைக் கேள்வியுற்ற நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் இன்று (நவ.28) அவரது வீட்டுக்குச் சென்றது.
வலிக்குது அம்மா..!: வீட்டிற்குள் விநோத நோயால் துடிக்கும் மகன்.. பரிதவிக்கும் தாய்.. உதவி கேட்கும் குடும்பம்.. இவ்வாறு பல விரிசல்களை கொண்ட அந்தப் பழைய வீட்டின் சுவர்களில் செடிகள் முளைத்துக் கொண்டு இருந்தன. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இரண்டு கண்களும் வெடிக்கும் நிலையிலான பாதிப்பில் சுருண்டு கிடக்கிறான் சிறுவன் சரண்சங்கீத். தன் வலியை, நோயின் தீவிரத்தைக் கூட வாய்விட்டு சொல்லத் தெரியாத அந்தச் சிறுவன், தன் தாய் மடியிலேயே சாய்ந்துகிடக்கிறான்.
'அம்மா' என்பதைத் தவிர வேறெதும் தெரியாது:இது குறித்து விழியில் வழிந்தோடிய கண்ணீருடன்,"எம் பிள்ளைகளை நினைச்சு அழுது.. அழுது.. என் கண்ணீரும் வத்திப்போச்சுங்க" என்றபடியே பேசத் தொடங்கினார், வளர்மதி. "என் பையன் இப்போ வரைக்கும் ஒரு கைக்குழந்தை மாதிரிதான். பிறப்பிலிருந்தே அவனுக்கு மனவளர்ச்சி பாதிப்பு இருக்கு. 'அம்மா' என்ற வார்த்தையைத் தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது.
இன்னும் குழந்தைதான்!:ஆயிரம் பேர் தொட்டாலும், என் கைபட்டவுடனே மட்டும் 'அம்மா'-னு சொல்லுவான். என் குரல் கேட்க கொஞ்சம் நேரமானாலும் துடிதுடிச்சுப் போயிருவான். அவனோட உடலுக்குத்தான் 19 வயதாகுது. அவன் மூளைக்கும் மனசுக்கும் வயசே கிடையாது; வளர்ச்சியும் கிடையாது. சாப்பாடு ஊட்டுறது, துணிகள் மாட்டி விடுறதுனு ஒரு குழந்தையைப் போலத்தான் அவனை இப்போவும் கவனிச்சுக்கிட்டிருக்கேன்.
காலமான கணவரும் தொற்றிய துயரமும்:என்னோட வீட்டுக்காரர் ஸ்ரீதர் பாபு, செக்யூரிட்டி வேலைக்கு போயிட்டிருந்தார். 5 வருசத்துக்கு முன்னாடி அவருக்கு திடீர்னு கிட்னி பாதிப்பு ஏற்பட்டுச்சு. டயாலிசிஸ் பண்ணிக்கிட்டிருந்தோம். திடீர்னு ஒருநாள், அவரும் என்னை தவிக்க விட்டுட்டுப் போயிட்டார்!
அப்போதான், என் பையனோட பார்வையும் திடீர்னு இப்படி பறிபோச்சு. அவனோட ரெண்டு கருவிழிகளிலும் பெரிய கட்டி வளர்ந்துக்கிட்டிருக்கு. அது என்ன நோய்னே தெரியலை! ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகவும் கையில காசு இல்லை..
நாங்க இருக்கிற இந்த வீட்டுக்கு மாதம் 500 ரூபாய் வாடகை. அதையே என்னால கொடுக்க முடியலை. ஒவ்வொரு மாதமும் எனக்கு விதவை பென்ஷன் (கைம்பெண் ஓய்வூதியம்) 1,000 ரூபாயும், பையனுக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன் 1,000 ரூபாயும் தான் கிடைக்குது. இந்த 2,000 ரூபாயைத் தவிர எனக்கு வேறு வருமானம் கிடையாது.