வேலூர்:மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 1300 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று (ஆகஸ்ட் 21ஆம் தேதி) வெளியிட்டார்.
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு 2024 இன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 1300 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024க்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 17.10.2023 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு 1.1.2024இல் 18 வயது நிறைவு பெற்றவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பெயர், வயது மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் கால அட்டவணை அளித்து உள்ளது.
அதன் அடிப்படையில், சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக வாக்குச் சாவடிகள் வரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.