தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரக்கோணம் தொகுதியில் எம்.பி. நிதி ஒரு விழுக்காடு கூட செலவழிக்கப்படவில்லை -மநீம வேட்பாளர்

வேலூர்: அரக்கோணம் தொகுதியில் ஒரு விழுக்காடு கூட எம்.பி. நிதி செலவழிக்கப்படவில்லை என அத்தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

அரக்கோணம் தொகுதியில் 0 சதவீதம் எம்பி நிதி கூட செலவழிக்கப்படவில்லை - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

By

Published : Apr 5, 2019, 2:10 PM IST

Updated : Apr 5, 2019, 2:38 PM IST

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரன், நமது ஈடிவி பாரத் செய்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராஜேந்திரன் அளித்த பதில் விவரம் வருமாறு:

கேள்வி: அரக்கோணம் தொகுதியில் நீங்கள் வெற்றிபெற்றால் முன்னுரிமை அளித்து செயல்படுத்தக் கூடிய விஷயங்கள் எதுவாக இருக்கும்?

பதில்: மக்கள் நலனுக்கான திட்டங்கள் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை ஆராய்ந்து அந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்போம்.

கேள்வி: தொகுதியின் வளர்ச்சிக்கு தாங்கள் முன்னிறுத்தும் திட்டங்கள் என்ன? அவை குறித்து சில விளக்கம்?

பதில்: இங்கு குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அதுபோல் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் திறந்துவைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம். அதேபோல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று ஏற்படுத்துவோம்.

எங்கள் கட்சி கொள்கையில் கூட அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்ற உறுதியை கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மக்களவை உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி என ஐந்து ஆண்டுகளுக்கு 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி முழுமையாக வளர்ச்சித் திட்டங்களுக்கு சென்றடையவில்லை. நாங்கள் வெற்றிபெற்றால் இந்த 50 ஆயிரம் கோடி நிதியை முழுமையாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவு செய்வோம்.

கேள்வி: இந்தத் தேர்தலில் உங்களின் முதன்மையான முழக்கம் என்ன?

பதில்: எங்களின் முதன்மையான முழக்கம் இப்போதைய நிலை மாறவேண்டும் என்பதுதான். அதற்கு மக்களிடம்தான் அதிக பவர் உள்ளது. எனவே நல்லாட்சி ஏற்பட டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

கேள்வி: தங்கள் தொகுதியில் நீண்ட நெடுங்காலமாக நிறைவேற்றப்படாத திட்டங்கள் எவை? அவற்றை நீங்கள் எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்?

சோளிங்கரில் அமைந்துள்ள கோயில் அருகே குளம் ஒன்று 80 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் இந்த குளத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்கள் நகைகளை பறி கொடுத்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்று அந்த குளத்தை தூர்வார ஒப்புதல் தெரிவித்தது. ஆனால் அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது அரசுக்கு சொந்தமான குளம். எனவே நான் வெற்றி பெற்றால் அரசு சார்பில் அந்த குளத்தை தூர்வாரி ஆய்வுசெய்து, அதில் இருக்கும் நகை உள்ளிட்ட பொருட்களை கோயிலிடம் ஒப்படைப்பேன்.

மேலும் திருப்பதிக்கு இணையாக அந்த கோயிலை மேம்படுத்துவேன். கோயில் அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையை இணைத்திட பாடுபடுவேன்.

கேள்வி: தங்கள் தொகுதியில் சென்ற முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் செயல்பாடு குறித்து கருத்து என்ன?

தற்போதைய எம்.பி. (அதிமுகவைச் சேர்ந்த ஹரி) தனக்கு ஒதுக்கிய நிதியை ஒரு விழுக்காடு கூட மக்கள் நலன் சார்ந்த திட்டத்துக்காக பயன்படுத்தவில்லை.

இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியா ஒரு ஏழை நாடு அல்ல; இந்தியாவில் அதிக பணம் இருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது.

எனவே எம்.பி. தொகுதிக்கு ஒதுக்கப்படும் 50 ஆயிரம் நிதி முழுமையாக மக்கள் நலன் சார்ந்த திட்டத்துக்கு செலவு செய்யப்பட்டு இருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது.

இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்தார்

அரக்கோணம் தொகுதியில் 0 சதவீதம் எம்பி நிதி கூட செலவழிக்கப்படவில்லை
Last Updated : Apr 5, 2019, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details