தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது" - மு.க.ஸ்டாலின் சூசகம்! - திமுக முப்பெரும் விழா

DMK mupperum vizha 2023: தமிழ்நாட்டின் வளர்ச்சி பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அனைத்து துறைகளும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

DMK mupperum vizha 2023
"தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 10:07 AM IST

தமிழ்நாட்டின் வளர்ச்சி பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது - மு.க.ஸ்டாலின்

வேலூர்: பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி பகுதியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் திமுகவின் பவள விழா ஆகிய முப்பெரும் விழா திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

முப்பெரும் விழாவில் பெரியார் விருதை - மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருதை - மீஞ்சூர் க.சுந்தரத்திற்கும், கலைஞர் விருது - இ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது - தென்காசி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது - பெங்களூர் ந.இராமசாமி ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு நம்முடைய பொதுச்செயலாளரும், பொருளாளரும் குறிப்பிட்டதைப் போல, விடுதலைக் கனல் தெறித்த ஊர் வேலூர். இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் என்று 1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்தைச் சொல்வார்கள்.

ஆனால், 1806 ஆம் ஆண்டு, ஜூலை 10 ஆம் நாள் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த புரட்சியின் தொடக்கம்தான், இந்தியர்கள் இனியும் அடிமையாக வாழத் தயாராக இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தியது. அத்தகைய வீரம் விளைந்த ஊரில் இந்த ஆண்டுக்கான கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இங்கு சிப்பாய்க் கலகத்தின் நினைவுத் தூணைக் கலைஞர் நிறுவினார்.

வேலூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு மிகப்பெரிய கட்டடம் கட்டித் தந்ததும், வேலூர் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்ததும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்!.

அத்தகைய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், வேலூரில் முப்பெரும் விழாவை நடத்துவது மிக பொருத்தமானது. அதிலும் குறிப்பாக, நம்முடைய பொதுச் செயலாளர் அருமை அண்ணன் துரைமுருகன் அவர்களின் சொந்த மாவட்டம் இந்த வேலூர். காந்தி இருக்கிறார், ஜெகத்ரட்சகன் இருக்கிறார் அவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அதேபோல பல முன்னோடிகளும் அந்த உரிமையைக் கொண்டாட முடியும்.

ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல, அண்ணன் துரைமுருகன் இந்த மாவட்டத்தோடு எவ்வாறு ஒன்றி, பிணைந்து, இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவரே மேடைகளில் சொல்வார். என்னைக் கால்சட்டைப் பையனாக பார்த்தேன். இன்று தலைவராக பார்க்கிறேன் என்று. அப்படிப்பட்ட நான் இப்போது கழகத் தலைவராவும் - அவர் கழகத்தின் பொதுச்செயலாளராவும் இருப்பது பெருமைக்குரியது.

இருவருமே தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள் - வார்ப்பிக்கப்பட்டவர்கள் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்த பெருமை. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்த நாளையும் தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று 1985 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அறிவித்தார்.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நாம் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்திக்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டுக்கு இன்னும் இரண்டு கூடுதல் சிறப்புகள் இருக்கிறது. நம்மையெல்லாம் ஆளாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அதேபோல இந்த மாபெரும் இயக்கத்தின் பவளவிழா இன்றிலிருந்து தொடங்குகிறது.

'நான் சாமானியன் - மிகமிகச் சாமானியன். எனக்கடுத்த தளநாயகர்கள் எத்தனை பேர் வேண்டும்? இதோ எண்ணிக்கொள்!' என்று சொல்லி தனது தம்பிமார்கள் பட்டாளத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. கொட்டும் மழையில் பிறந்ததால் என்னவோ, உடனே வளர்ந்தது கழகம். இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கும் கழகத்தின் பவளவிழாவை வரும் ஓராண்டுக்கு நாம் கொண்டாடப்போகிறோம்.

அந்த வகையில் பார்த்தால், இது ஐம்பெரும் விழா என்று சொல்லத்தக்க வகையில் சிறப்பாக இன்றைக்கு நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டு காலம் நின்று நிலைத்திருப்பது சாதாரணமானது இல்லை. பெரிய பெரிய தலைவர்கள் உருவாக்கிய இயக்கமெல்லாம் அவர்கள் மறைந்தபோது அவர்களோடு சேர்ந்து மறைந்த எத்தனையோ வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம்.

ஆனால், தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததோ, அதே இளமையோடு - அதே வேகத்தோடு - அதே விவேகத்தோடு - அதே உழைப்போடு - அதே உணர்வோடு இன்று வரை இந்த 75வது ஆண்டிலும் கழகம் செழிப்போடு இருக்கக் காரணம் எதிரே அமர்ந்திருக்கும் நீங்களும், தமிழ்நாடெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான கழகத் தொண்டர்களும் தான். இந்த வேலூர் கோட்டை முதல் குமரிக் கடல் வரைக்கும் இந்தக் கழகத்தைக் கட்டி ஆள்பவர்கள் தொண்டர்கள்தான்.

உங்கள் எல்லோரையும் ‘தம்பி’ என்று அழைத்தார் பேரறிஞர் அண்ணா. ‘உடன்பிறப்பே’ என்று அழைத்தார் கலைஞர். நான் உங்களில் ஒருவன். நான் வேறு நீங்க வேறு இல்லை. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். தொண்டர்களால் தலைவனாவும், தொண்டர்களால் முதலமைச்சராவும் ஆக்கப்பட்டவன் நான்.

கழகத்தின் எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாமல், அதிகாரத்தின் எந்தப் பதவியையும் அனுபவிக்காமல், கருப்புச் சிவப்புக் கொடியைப் பிடித்திருந்தால் போதும், கருப்புச் சிவப்பு வேட்டியைக் கட்டியிருந்தால் போதும் என்ற உணர்வோடு உயிர்வாழும் தொண்டர்கள் இருக்கும் திசைநோக்கி நான் வணங்குகிறேன்.

இந்த ஆண்டுக்கான பெரியார் விருது கி.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருது முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருது துணை பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், பேராசிரியர் விருது ந.ராமசாமி அவர்களுக்கும், பாவேந்தர் விருது மலிகா கதிரவன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் பெற்ற 5 பேரையும் வாழ்த்தி பாராட்டுகிறேன், போற்றுகிறேன்!. 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயம் ஆனது. 75 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் காவல் அரணாக கழகம் செயல்பட்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டு முதன் முதலாக நாம் ஆட்சிக்கு வந்தோம். 1971, 1989, 1996, 2006, 2021 என்று மொத்தம் ஆறு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறோம்.

ஒரு பக்கம் ஆட்சி - இன்னொரு பக்கம் கட்சி இரண்டின் மூலமாகவும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். இடையிடையே கொள்கையற்ற அதிமுக கூட்டத்தின் ஆட்சி வந்து தமிழ்நாட்டைச் சீரழித்தாலும், அதையும் திருத்தி தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து வருகிறோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி, தமிழினத்தின் வளர்ச்சி, பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக, நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பாரதீய ஜனதா கட்சி செய்துகொண்டு வருகிறது.

ஜிஎஸ்டி மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான்.

மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகள், கடன்கள், மானியங்கள், பெண்கள் முன்னேற்றம், விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள் இவை எல்லாவற்றையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. இதை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? அப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜிஎஸ்டியை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள்.

நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறையாகப் பிரித்துக் கொடுக்கிறீர்களா அதுவும் இல்லை. அதேபோல் கல்வி மிக முக்கியமான ஒரு துறை. ஒவ்வொரு மாநில அரசும் அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள்.

ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை. நீட் தேர்வைப் பற்றி சொல்லவே அவசியமில்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டது. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்துக்காகவே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த 14 ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு, 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இத்தனை தற்கொலைகள் நடக்கிறதே, இதற்கான காரணத்தை ஒன்றிய பாஜக அரசு ஆராய்ந்ததா?. இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எத்தனை வாக்குறுதி கொடுத்தார்கள், நிறைவேற்றினார்களா?.

நேற்று ஒரு தாய்மார் கேட்கிற மாதிரி, போனில் மீம்ஸ் பார்த்தேன். "எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு… பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?" இது தற்போது வைரலாகிவிட்டது. நாம் பிரதமரைப் பார்த்து என்ன கேட்கிறோம்? இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று புதிதாக எந்த வாக்குறுதியையும் கேட்கவில்லை. புதிதாக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கீர்களா? இல்லையா என்றுதான் கேட்கிறேன்.

தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. உதாரணத்துக்கு ஒன்று கேட்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015ல் சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக் கூடாது என்றுதான் மற்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் குளிர்காயப் பார்க்கிறார்கள்.

சரி என்ன சாதனை இந்த 9 வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியது தான் மோடியின் சாதனை, 3 மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா?

மேலும் 2014ல் ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 71 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 102 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை 3 மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வரும்போது டீசல் ஒரு லிட்டர் 55 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 94 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை 7 மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது பாஜக அரசு.

இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய்தான். அது, இந்த 9 ஆண்டுகாலத்தில் 155 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாயை வாராக் கடன் என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறது பாஜக அரசு. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்குத் தந்த பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையின்படி, ரூ.7.50 லட்சம் கோடி முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சிபிஐ அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை.

பாஜகவின் ஊழல் முகத்தைப் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஆக வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமது கூட்டணிதான் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும்.

அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியுமா? முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர நம்மால் முடியும்.

புதிய விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்களை இயக்க முடியும். இவை எல்லாமே நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும். அன்பு உடன்பிறப்புகளே! உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்! என்று இந்த வேலூர் மண்ணில் நடைபெறும் முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்’ - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details