வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள பீஞ்சமந்தை மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி வந்திருந்தார். இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்து வருகின்றனர். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு துறைகளின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஞ்சமந்தை மலைக்கு செல்லும் சாலையில் மணல் அடித்து சமன் செய்து சீரமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமைச்சர், அலுவலர்கள் மலையை விட்டு கீழே இறங்கியபோது மழையினால் மணல் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறியது. கிராமத்தில் இருந்து சிறிது தூரம் இறங்கியதும் சகதி நிறைந்த ஒரு பெரிய ஏற்றம் ஒன்று இருந்ததால் வழியில் சென்று கொண்டிருந்த கார், இருசக்கர வாகனம் என அனைத்தும் நகர முடியாமல் சிக்கிக்கொண்டன.
பின்னர் நீண்ட நேரம் முயற்சித்தும் காரை மீட்க முடியாமல் காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் திணறி வந்தனர். நிலைமையை உணர்ந்த அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் போன்றோர் தங்களது காரில் இருந்து வெளியே வந்து சூழ்நிலையை பார்வையிட்டனர்.