வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் வேலூர்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறதா, ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று(ஜன.10) மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "CITU, AITUC ஆகிய இரண்டு சங்கங்கள் வாபஸ் பெறுவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதை நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்திய பின்பு உண்மை நிலவரம் தெரிய வரும். வருகின்ற 19-ஆம் தேதி தொழிலாளர் சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதற்கு நீதினறம் சில வழிமுறைகளை வழங்கி இருக்கிறது.
அதன் பின்பு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து நலன்களையும் இந்த அரசு கவனத்தில் வைத்து இருக்கிறது. பொங்கல் நேரத்தில் மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் காலையில் காஞ்சிபுரத்திலும் தற்போது வேலூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
பொங்கல் பண்டிகையில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து தொழிலாளர்களையும் பணிக்குத் திரும்புங்கள் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது. சங்கங்களுடனான பேச்சு வார்த்தைக்குத் தமிழ்நாடு தயாராக உள்ளது. பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் 800க்கும் மேற்பட்டோருக்குப் போக்குவரத்துக் கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு கோரிக்கையான புதிதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களைப் பணி நியமனம் என தொழிலாளர் சங்கங்கள் முன்பு வைத்த இரண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி இருக்கிறது. மீதமுள்ள 4 கோரிக்கைகளும் நிதிநிலை அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றுவார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமையைப் பொருத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்" என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
இதனையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், நாளை (ஜன.11) உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊழியர்களுக்கு சாதகமாக உத்தரவிடுகிறோம்.. போராட்டத்தை வாபஸ் வாங்க நீதிமன்றம் வலியுறுத்தல்..!