வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று வேலூர் சலவன்பேட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அதன் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 67 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ளனர். உருது மொழி பேசும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது.
மாணவர்கள் எண்ணிக்கையை காரணம்காட்டி எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.
தொடர்ந்து பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருவது குறித்த கேள்விக்கு, பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதற்காக நாங்கள் என்ன அரிவாளை எடுத்துக்கொண்டு செல்ல முடியுமா? என கேள்வியெழுப்பிய செங்கோட்டையன், மத்திய அரசு மூலம் தடுப்பு அணை கட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தமிழ்நாடு அரசு நிச்சயம் எடுக்கும் என்றார்.
திராவிட இயக்கம் என்பது அனைத்து தென் தமிழ்நாட்டு மக்களையும் உள்ளடக்கியது என குறிப்பிட்ட அவர், இதனால் பாலாறு விவகாரத்தில் சுமுகமான உறவை மேம்படுத்திவருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.