வேலூர்:திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று (நவ.7) நடைபெற்ற 'நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம்' தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்களும் அதிக அளவில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசும் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்பட்டு வருவதால் உயர் கல்வியில் மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பொற்காலமாக திகழ வேண்டும். இதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் உயர்கல்வியுடன் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். படித்து முடித்த பின்பு, வேலை தேடுபவர்களாக இல்லாமல் தொழில் முனைவோர்களாக மாறவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும். இதற்குதான், மாணவர்கள் அதிக அளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தி மொழியை வேண்டுமானால், ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம். ஆனால், இந்தியை திணிக்கக்கூடாது என்ற கொள்கையில் தமிழ்நாடு அரசு உள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் எந்த துறையில் முன்னேறவேண்டும் என்று நினைக்கிறார்களோ? அதனை அறிந்து, ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.