வேலூர்: சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், ரூ 10 கோடி செலவில் கட்டப்படவுள்ள தங்கும் விடுதிக்கான இடத்தினை மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (நவம்பர் 24) மாலை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; "வேலூரில் சத்துவாச்சாரி பகுதியில் தங்கும் விடுதிகள் தேவை என பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றது. அதன் அடிப்படையில் சத்துவாச்சாரியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், 48 குடியிருப்புகளுடன், 9 அடுக்குமாடி தங்கும் விடுதி கட்ட திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணி விரைவில் துவங்கி, ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார். மாநிலம் முழுவதும் தங்கும் விடுதிகள் தேவைப்பட்டால் அதற்கேற்றார் போல் தமிழக அரசு கட்டித் தர நடவடிக்கை எடுக்கும். மேலும், தமிழகம் முழுவதும் 12 இடங்களில் வீட்டு வசதி துறையின் சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.