தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேரடியாக விவாதிக்க நீங்கள் தயாரா? - ஈபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்!

Minister Ma. Subramanian challenges to Edappadi Palanisami: தமிழகத்தில் சுகாதாரத்துறை மீது குறை கூறும் எடப்பாடி பழனிசாமி அது குறித்து விவாதிக்க தயாரா? என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் விவாதிக்க நான் தயார்..! என்றும் தேதியையும், இடத்தையும் முடிவு செய்யுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 21, 2023, 6:27 PM IST

நேரடியாக விவாதிக்க நீங்கள் தயாரா? நான் தயார்..! இடத்தை சொல்லுங்கள் - ஈபிஎஸுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்!

வேலூர்:உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாத திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினால் அல்லது நேரடியாக விவாதிக்கும் திறன் இருந்தால், எடப்பாடி பழனிசாமி தேதி ஒன்றை முடிவு செய்து அறிவிக்கட்டும். நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார். கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறையில் நடந்த பணிகளை பட்டியலிடுங்கள் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறையின் சாதனைகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள தர சான்றிதழ்களே சாட்சி என்று தமிழக சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைட்டல் பே தனிப்பிரிவையும், பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தையும் தமிழக சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆக.21) திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் மருத்துவர்களை சந்திப்பதற்கு முன்பே அவர்களுக்கு உயரம், எடை, நாடித் துடிப்பு, சுவாச விகிதம், ரத்த அழுத்தம், ரத்த சோகை, ரத்த சர்க்கரை போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். இதன்மூலம், காலவிரயம் தவிர்க்கப்பட்டு மருத்துவர்கள் விரைவாக சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக சுகாதாரத்துறை மீது பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளார். இந்த துறையானது கடந்த அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில்தான் பெரும் சாதனைகளை புரிந்து வருகிறது.

11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள்: குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 1950ஆம் ஆண்டில் ஒரு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திமுக ஆட்சியில்தான் புதிதாக ஒரு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. தவிர, மருத்துவத்துறை வரலாற்றில் இதுவரை 6 செவிலியர் பயிற்சி கல்லூரி மட்டுமே தொடங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.

ஓரே ஆண்டில் மத்திய அரசின் 239 சான்றுகள்:மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவ சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் 2013 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய தர மதிப்பீட்டுச் சான்றில் இதுவரை தமிழகத்துக்கு 478 சான்றுகள் பெறப்பட்டுள்ளன. இதில், கடந்த ஓராண்டில் மட்டும் 239 சான்றுகள் பெறப்பட்டுள்ளன. அதாவது, அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகளில் பெற்ற சான்றுகளின் எண்ணிக்கையை திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மகப்பேறு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அறுவை சிகிச்சை பிரிவுக்காக 2017ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு அளித்துவரும் தரச்சான்று தமிழகத்துக்கு இதுவரை 77 சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 43 தரச்சான்றுகள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ளன.

மேலும், உறுப்புதானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதை பாராட்டி மத்திய அரசு கடந்த 15 நாட்களுக்கு விருது அளித்துள்ளது. கடைநிலை மக்களுக்கும் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக செயல்படுத்தப்படும் இல்லம் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48, இதயம் காப்போம், வருமுன் காப்போம், சிறுநீரக பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாதவை.

எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்..!:அந்தவகையில், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் செயல்படுத்திய திட்டங்களில் நான்கில் ஒரு பங்குகூட முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக செயல்படுத்தவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்குநேர் விவாதிக்கவும் தயாராக உள்ளோம்.

செங்கப்பட்டில் உள்ள டாம்ப்கால் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சித்த மருந்துகளை முன்பு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே கொள்முதல் செய்துவந்தன. தற்போது அதனை கூட்டுறவு அங்காடிகளுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்துவருகிறோம். இதன்மூலம், விரைவில் டாம்ப்கால் தொழிற்சாலை சிறந்த நிலைக்கு கொண்டு வரப்படும்.

ரூ.300 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்:2016 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு இருந்தது. 2017-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தபிறகுதான் நீட் தேர்வு தமிழகத்துக்குள் வந்தது. அந்த வகையில், தமிழகத்துக்குள் நீட் தேர்வு வருவதற்கும், இதுவரை 21 பேர் பலியானதற்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் முழு முதல் காரணமாவார். இதனை மக்கள் நன்கு அறிவர் என்றார். தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நிலையில், மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஓராண்டு காலத்துக்குள் இந்த ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு வரும்.

தவிர, ராணிப்பேட்டை, திருப்பூர், நாகர்கோயில் என தமிழகத்தில் சில மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கருப்பை புற்றுநோய், வாய்ப்புற்று நோய், மார்பக புற்றுநோய் என எந்தவகை புற்றுநோயாக இருந்தாலும் அது தொடக்க நிலையில் இருந்தால் குணப்படுத்த முடியும். அதற்காக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக புற்றுநோய் பரிசோதனை செய்திட அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள்" - டிடிவி தினகரன் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details