முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்வு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையேற்றார்.
இதில், முதியோருக்கு உதவித்தொகை வழங்குதல், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வீரமணி வழங்கினார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், குறை தீர்வு முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்படும். ஒரு வேளை மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அது குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு பதிலளிக்கப்படும்.
காட்பாடி தொகுதியில் 1,341 பேருக்கும், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் 1,050 பேருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலேயே இந்த இரண்டு தொகுதிகளில் தான் அதிக பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகையை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்"என்றார்.