தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் ஐ. பெரியசாமி - 00days work scheme implementation across tamilnadu

தமிழ்நாட்டில் உள்ள 79 ஆயிரத்து 395 கிராமங்களை உள்ளடக்கிய 12 ஆயிரத்து 525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் ஐ.பெரியசாமி

By

Published : Apr 9, 2023, 8:29 PM IST

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

வேலூர்: அணைக்கட்டு அருகே ஊனை கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்று (ஏப்ரல் 9) பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு, பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “நீண்ட காலமாக குடிசை வீடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அரசு, வீட்டு மனைப் பட்டா மற்றும் வீடு கட்டுதல் போன்ற அடிப்படைத் தேவைகளை பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வருகிற ஜூன் மாதத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள 79 ஆயிரத்து 395 கிராமங்களை உள்ளடக்கிய 12 ஆயிரத்து 525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற பருவமழை காலத்திற்கு முன்னதாக செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள், அனைத்து கிராம சாலைகளுக்கான பணிகள் முடிக்கப்படும். ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர், மின்விளக்கு ஆகிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, முழுவதும் தன்னிறைவு பெற்ற கிராமங்களை ஏற்படுத்துவது அரசின் முக்கிய நோக்கம்.

சுமார் 50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு, அவர்களின் கடைசி வீடு வரை சாலை வசதி ஏற்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் மகளிருக்கான உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கிராமப் புறங்களில் இருக்கும் மகளிர், நகரங்களுக்கு செல்லும்போது, உள்ளூர் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பல கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்குச் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, அங்கு 11 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 55 தொகுப்புகளைக் கொண்ட 220 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:'மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வேண்டும்' - அரூர் எம்எல்ஏ கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details