வேலூர்: வேலூர் சரகத்தில் உள்ள திருப்பத்தூர், கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள 21 பள்ளிவாசல் பராமரிப்புக்காக மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (டிச.28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் 134 பள்ளிவாசல்கள் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.7 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்காவிற்கும் சீரமைப்பு நிதி ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 2 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறை சார்ந்த உலாமாக்கள் நல வாரியம் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "சிறுபான்மையினர் ஏழை பெண்களுக்கு ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 2 ஆயிரத்து 500 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 5 ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.