கருணாநிதி குறித்து அமைச்சர் துரைமுருகன் புகழ்ந்து கூறியுள்ளார் வேலூர்:கலைஞரின் நூற்றாண்டு விழா இன்று (நவ. 25) வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி கலைஞரின் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நூற்றாண்டு விழா சிறப்பு மலரை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி, ஆர்.காந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "கலைஞர் தொட்ட சிகரத்தை வேறு எவராலும் தொட முடியாது. அடி முடி காணாதவர் அருணாச்சலேஸ்வரர். அதேபோலத்தான் கலைஞரும். அரசியல், சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
இதையும் படிங்க:யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
பண்பாடுமிக்கவர், தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர். பேரறிஞர் அண்ணா மீது மிகுந்த பற்றுடையவர். சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்ற சட்டம் கொண்டு வரவும், மாநில சுயாட்சி கொண்டு வரவும், வங்கிகள் தேசிய மயமாக்க காரணமாகவும் இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வர காரணமாய் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. எந்த மாநிலத்திலும் கொண்டு வராத பல புதிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்" என அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சச்சேனா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன்.. முற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் - அண்ணாமலை மோதல்!