வேலூர்: திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைந்து நடத்தும் மத நல்லிணக்க மாநாடு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் வேலூர் பெரியார் பூங்கா அருகில் நடைபெற்றது.
"பாஜகவுக்கு தமிழகம் ஒரு பொழுதும் அடிபணியாது" - அமைச்சர் துரைமுருகன்! இந்த மத நல்லிணக்க கூட்டத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழ் மையம் தலைவர் ஜெகத் கஸ்பர், திராவிட முன்னேற்றக் கழக வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார், திராவிட நட்புக் கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிங்கராயர் மற்றும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தலைவர்கள், கிறிஸ்துவ பாதிரியார்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில், "இந்த வரலாறு மறைக்கப்பட வேண்டும், தமிழன் என்ற உணர்வு அடிபட்டு போக வேண்டும், தெலுங்கர் என்ற உணர்வு அடிபட்டு போக வேண்டும், பஞ்சாபி என்ற உணர்வு அடிபட்டு போக வேண்டும், இங்கு எல்லாத்துக்கும் முதல் பிஜேபி என்ற காரணத்திற்காக அனைவருக்கும் பிஜேபி உணர்வை ஊட்டும் வகையில் வரலாற்றை மாற்றியமைக்கின்றனர்.
இது இல்லையேல் சாதாரண பள்ளி பிள்ளைகளுக்கு படிக்கும் வாய்ப்பு இருக்காது. இதைத்தொடர்ந்து பிஜேபி ஆட்சியில் இருந்தால் கல்வி பாட புத்தகத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள். ஆகவே இந்தியாவில் வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. இந்து மதம் மட்டும் இருக்க வேண்டும். அந்த இந்து மதம் சனாதனத்துடன் இருக்க வேண்டும்.
சனாதனத்துடன் இருக்க வேண்டும் என்றால் கொள்கையோடு இருக்க வேண்டும், சாதி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதைக் கூட நேரு சொன்னார் எந்த காலத்திலும் ஆரியர்கள் மற்றவனை தன்னை விட உயர்ந்தவர் என்று கருத மாட்டார். அவர் இங்கிலாந்தில படித்தவர் அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. ஆகையால் நேரடியாக எழுதிவிட்டார்.
ஆனால் இந்த ஊரில் படித்தவர்கள் எல்லாம் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தை எழுதியிருக்கார்கள். ஆகையினால் இவ்வளவு பெரிய திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முன்னர் திருமாவளவன் என்னிடம் கூறினார், ஓட்டு போடும் போது நாம் மட்டும் போட்டு வந்தால் போதும் எனக் கருதுகின்றீர். போன முறை 11 மணி வரை ஓட்டு டல்லாக இருந்தது, இந்த 11 மணிக்கு மேல ஹாட்ஸ்விங்கில அடிச்சான்னு தெரிஞ்சதும் பரபரவென்று ஓட்டு விழுந்தது.
ஆனால் ஒன்றை மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், எல்லோரும் (மற்ற மாநிலங்கள்) அடிபணிந்து விடுவார்கள் ஆனால் இது பெரியார் மண் என்றைக்கும் பிஜேபிக்கு அடிபணியாது. எனவே சிறுபான்மையரும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, வேறு சிறுபான்மையினர்ர் ஆனாலும் சரி உங்களுடைய உரிமையும், உடைமைகளையும் கட்டிக் காப்பதில் நாங்கள் (திமுக) என்றைக்கும் பின் வாங்க மாட்டோம். அதைத் தான் எங்கள் தலைவரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்" என்று கூட்டத்தில் பேசினார்.
இதையும் படிங்க: West Bengal Panchayat Election: 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - அமித் ஷாவை சந்திக்கிறார் ஆளுநர்!