வேலூர் மாவட்டம் காட்பாடியில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் தவணை கரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான சிறப்பு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி இன்று (ஜுன்.14) நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அரசு அலுவலர்களும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக பாலாற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.