வேலூர்:தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் திமுக எம்.பி.யுமான பொன் கௌதம சிகாமணியின் ஆகியோரது வீடுகளில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என பாடல் பாடி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 10 கோடி 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட உள்விளையாட்டு அரங்கம், 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: பொன்முடி வீட்டில் ரெய்டா..? - எனக்கு தெரியாது என கூறிய அமைச்சர் துரைமுருகன்!
பின்னர், விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டறிந்தார். மேலும், இது தொடர்பான விவரங்களை விரிவான அறிக்கையுடன் மாநில விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு (Youth Welfare and Sports Development Dept) அனுப்புமாறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.