வேலூர்: காட்பாடி வட்டத்தில் உள்ள இரட்டை ஏரியான தாரப்படவேடு ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளை சுமார் 28 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், ஏரியின் கரை பகுதிகளில் தேவையற்ற குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கவும், பணிக்கு இடையூராக உள்ள மின்கம்பங்களை முறையாக மாற்றி அமைக்கவும் அலுவலர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஜி20 மாநாட்டின் அழைப்பிதழில், 'இந்திய குடியரசு தலைவர்' என்பதற்கு பதிலாக, 'பாரத குடியரசுத் தலைவர்' என அச்சடிக்கப்பட்டு இருப்பது, அவர்களின் நிலைப்பாடு, இதில் என்னுடைய நிலைப்பாடு எதுவும் இல்லை. என்னை கேட்டா அவர்கள் அழைப்பிதழ் அடித்தார்கள் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தாரப்படவேடு ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளை 28 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் கரைகளை இணைத்து சிறுபாலம் அமைக்கும் பணி, ஏரிகளை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யாவண்ணம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, கழிப்பறை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.