அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு வேலூர்:திமுக செயற்குழு கூட்டம் வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி பிரமுகர்களுடன் திருச்சியில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தரை ஆளுநர் சந்தித்தது குறித்த கேள்விக்கு, ஏடாகூடமான காரியத்தைச் செய்வது நமது ஆளுநர். அதில் இதுவும் ஒன்று. தற்போது அவர் பரபரப்பாகச் செயல்படுகிறார். தமிழகத்தில் 760 இடங்களில் நீர் நிலைகளில் உடைப்புகள் சேதங்கள் ஏற்பட்டுள்ளன இவற்றை முழுவதுமாக சரி செய்திட சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்றார்.
பின்னர், பொன்முடி கைது ஆவதிலிருந்து விலக்கு கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு, அதை வரவேற்கிறோம் என பதிலளித்தார். மேலும், நீட் எதிர்ப்பு தேசத்திற்கான எதிர்ப்பு என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அய்யயோ அவங்க ரொம்ப பெரியவங்க என தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்து மத விவகாரங்களில் சங்கராச்சாரியார்களே கருத்து கூறலாம்; பாஜக அல்ல - கி.வீரமணி