வேலூர்:வேலூர் அடுத்த காட்பாடியில் கூட்டுறவுத்துறை சார்பில் 70வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் கூட்டுறவு உறுதிமொழி எடுக்கப்பட்டு, பின்னர் பயனாளிகளுக்கு 17.42 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அதனை அடுத்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கடனை நாங்கள் கொடுக்கிறோம். ஆனால், அதை திருப்பிக் கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தை விட, கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்ற கோஷம்தான் மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
அப்படி மக்கள் நினைத்தால், கூட்டுறவுத் துறையும் நிற்காது, அரசாங்கமும் நிற்காது. மற்ற இடங்களில் கடன் வாங்கினால் மட்டும், மக்கள் கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்துகின்றனர். கூட்டுறவுத் துறையில் கடனை வாங்கினால், அதனைத் திருப்பி கட்ட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கோரிக்கை.