நாட்றம்பள்ளி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வேலூர்: நாட்றம்பள்ளி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த ஏழு பெண்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்த நிலையில், அந்த நிதியை அமைச்சர் துரைமுருகன் நேற்று (செப்.11) நேரில் சென்று வழங்கினார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் கடந்த 8 ஆம் தேதி 2 வாகனங்களில் கர்நாடக மாநிலம் தர்மசாலா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில், பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் பஞ்சரானது.
ஓட்டுநர் வேனை சாலையில் நிறுத்திவிட்டு எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி பஞ்சரை சரி பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதில் பயணித்தவர்கள் சாலையின் நடுவே அமர்ந்து இருந்தனர். இந்நிலையில், அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று பஞ்சராகி நின்று கொண்ட்ய் இருந்த வேன் மீதும், வேனில் இருந்து இறங்கி சாலையில் அமர்ந்து இருந்த பெண்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க:காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவர் மீட்பு! உறவினர் வீட்டில் தஞ்சமடைந்ததாக வாக்குமூலம்.. எதற்காக சென்றார் தெரியுமா?
இந்த விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் காவல் நிலையித்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதியை, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அணைக்கட்டு ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இச்சம்பவம் வேதனை அளிக்கிறது. சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்கள் 100 நாள் வேலை செய்யக்கூடிய பொருளாதாரம் குறைவாக உள்ள குடும்பம். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாது. எவ்வளவு செய்தாலும் அவர்கள் இழந்ததற்கு ஈடு செய்ய முடியாது. இந்த நிதி ஒரு ஆறுதலுக்காக மட்டும் தான். இது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது. அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான படிப்பு செலவுகளை கட்சியின் சார்பாகவும் செய்கிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி வெளியே பேசினால் பலர் உள்ளே போவார்கள் - சீமான் அதிரடி