தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மழையை துல்லியமாக கணிப்பது இப்படித்தான்" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்! - சே பாலச்சந்திரன்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் மொத்தமாக இயல்பை விட 9 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளதாகவும், தமிழகத்தில் தற்போது பெருமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

Etv bharat
தமிழகத்தில் தற்போது பெருமழைக்கு வாய்ப்பில்லை - சே.பாலச்சந்திரன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 10:40 AM IST

வேலூர்: வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வேளாண்மைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் துணைப் பொது இயக்குநர் சே.பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்து கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாமை வேலூரில் நடத்தினர்.

இந்த முகாமிற்கு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கருணாகரன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க.தமிழ்வாணன் வரவேற்றார். இதில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் துணை பொது இயக்குநர் சே.பாலச்சந்திரன் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், "ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற காற்று வீசும் திசை, அதன்போக்கு, வெப்ப நிலை, ஈரப்பதம் ஆகியவற்றை அறிந்து வேளாண்மைக்கு உதவி செய்கிறோம். இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வேளாண்மைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்கள், செயற்கைக்கோள் தரவுகள், ரேடார் மூலம் கிடைக்கப்பெற்று பகிரப்படுகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்" என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், "தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் மொத்தமாக இயல்பை விட 9 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இருப்பினும் மாவட்டம் வாரியாக பார்க்கையில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இயல்பை விட சற்று அதிகமாகவும், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட மிகவும் குறைவாகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

குறிப்பாக அந்த மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. தமிழகத்தில் மேக கூட்டங்கள் இல்லாத காரணத்தினாலும், காற்றின் ஈரப்பதம் குறைந்து இருப்பதன் காரணமாகவும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது.

அதிக வெப்பநிலை காரணமாக அவ்வப்போது ஏற்படும் இடிமேகக் கூட்டங்களால் மழைப்பொழிவு இருக்கிறது. வானிலை துல்லியமாக கணக்கிட மாவட்டங்கள் தோறும் தானியங்கி மழை மானிகள் பொருத்தப்பட்டதன் காரணமாக, தற்போது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை மழை நிலவரம் குறித்து துல்லியமாக கணக்கிடப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது பெருமழைக்கு வாய்ப்பு இல்லாவிடினும், இடிமேக கூட்டங்களால் அடுத்த மூன்று நாட்களுக்கு அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவர் கோ.அந்துவன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி திட்ட தொழில்நுட்ப அலுவலர் தெ.திவ்யலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:பொறாமையால் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு.. பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details