வேலூர்:மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாளை வரை கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார். மழையின்போது மரங்கள், மின்கம்பங்கள், உயர்மின் கோபுரங்கள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்கவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ மற்றும் வாகனங்கள் நிறுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இன்றும், நாளையும் பொதுமக்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பால்பொருட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் டார்ச் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளை புயல் கரையை கடந்த பின்பும், புயலின் தாக்கங்கள் குறையும் வரை, அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதையும், பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கடும் சீற்றத்துடன் மாமல்லபுரம் கடற்கரை!