வேலூர்: வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குத்தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஏற்கெனவே 6 பேரை கைது செய்த நிலையில், அந்நிறுவனத்தின் முக்கிய ஏஜென்டான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் 26 லட்சம் ரூபாயை முதலீடு செய்து பணத்தை இழந்த, வேலூர் மாவட்டம், குடியாத்தம் கல்லேரி பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவர்(39) இன்று(மே.2) தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
அந்த தற்கொலைக் கடிதத்தில், "அதிக வட்டித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியதால், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரிய கரும்பூரைச் சேர்ந்த வெங்கடேஷிடம் 26 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டேன். அவர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டாகச் செயல்பட்டு வந்தார். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரால், அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். கடன் வாங்கி, அவ்வளவுப் பணத்தையும் அவரிடம் கொடுத்திருந்தேன்.
இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்பதால், என்னால் திருப்பித் தர முடியவில்லை. தனிப்பட்ட முறையிலேயே, நான் 12 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வட்டி கொடுத்துவிட்டேன். அதிக கடன் சுமையில், மாட்டிக்கொண்டேன்.