வேலூர்:வேலூரில் டீக்கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மாமுல் கேட்டு ரவுடி ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் இன்று (செப்.26) கைது செய்தனர்.
வேலூர் மத்திய பகுதியிலுள்ள ஷார்னா மேடு என்ற இடத்தில் டீக்கடை வைத்து தொழில் செய்து வருபவர், அப்துல் கரீம். இவர் அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், பல வழக்குகளில் சிக்கியுள்ள அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்கிற கலி, ரவுடியாக வலம் வருவதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது அருணாச்சலம் அப்பகுதியில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அப்துல் கரீம் டீக்கடைக்கு விடுமுறை விட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த அருணாச்சலம், திடீரென அப்துல் கரீமின் கழுத்தில் கத்தியை வைத்தபடி மாமுல் வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளார்.
அப்போது அப்துல் கரீம் இன்றைக்கு கடை விடுமுறை, ஆகவே, என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி அருணாச்சலம் டீக்கடையை சுக்கு நூறாக உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும் ரவுடி அருணாச்சலம், கரீம் பாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காவல் துறையில் புகார் அளித்தால் உன்னை ஒழித்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.