தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன விபத்தில் தாயும், குழந்தையும் பலி; போதையில் 20அடி கிணற்றில் விழுந்த ஓட்டுநர் மீட்பு.. - கிணற்றில் விழுந்த ஓட்டுநர்

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகனும் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு கோயிலுக்குச் சென்ற வேனின் மீது லாரி மோதிய விபத்தில் 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 29, 2023, 9:28 PM IST

சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூலை 28) நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. லாரியை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷத்கான் (42) என்பவர் ஓட்டிச் சென்றார். அதேசமயம், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த கைலாசம் மகன் மகேந்திரன் (42), அவரது குடும்பத்தினர் உள்பட உறவினர்கள் 3 குடும்பத்தினர் பெருந்துறை பகுதியில் இருந்து திருப்பதி செல்வதற்காக வேனில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில் வேலூர் அன்பூண்டி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை அதன் ஓட்டுநர் ஹர்ஷத்கான் இடது பக்கமாக திருப்பியுள்ளார். அப்போது, பின்னால் வந்த வேன் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேன் முற்றிலும் சேதமடைந்தது.

லாரி மீது வேன் மோதி விபத்து

மேலும், வேனில் பயணம் செய்த 15 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லாரி ஓட்டுநர் ஹர்ஷத்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் 20 அடி கிணற்றில் விழுந்த ஓட்டுநர்:

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள திங்களூர் நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஆவாரங்காட்டு புதூர் அருகே கூதாம்பி என்ற இடத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு தனது பிக்கப் வேனில் ஏறி பின்னோக்கி சென்றுள்ளார். அப்போது அருகில் தண்ணீர் இல்லாமல் இருந்த 20 அடி கிணற்றில் வேணுடன் ராஜேந்திரன் தவறி விழுந்தார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் திங்களூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கிணற்றில் விழுந்த ஓட்டுநர் மீட்பு

தகவல் அறிந்து அங்கு சென்ற திங்களூர் காவல் துறையினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு 20 அடி கிணற்றில் தவறி விழுந்த ராஜேந்திரனை பத்திரமாக மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை தடுப்பின் மீது மோதிய தனியார் பேருந்து:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு இயக்கப்பட்டு வரும் சில தனியார் பேருந்துகள் அதிக சத்தத்துடன் அதிவேகமாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். அதில், கொடைக்கானலில் இருந்து பூம்பாறை கிராமத்திற்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இந்த பேருந்து அப்சர்வேட்டரி பிரதான சாலையில் பேருந்து நிலையத்தை நோக்கி சென்றபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் தடுப்புகள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து

இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . மேலும் இதுபோன்று தனியார் பேருந்துகள் கொடைக்கானல் மலைச்சாலைகளில் அடிக்கடி அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன விபத்தில் தாயும், குழந்தையும் உயிரிழப்பு:

வேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.என் பாளையம் பகுதியைச் சேர்ந்த தஸ்கீர் (33). இவரது மனைவி ஷாயீன்(25). இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இவர்கள், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் உள்ள தர்காவில் வழிபாடு செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

இருசக்கர வாகன விபத்தில் தாயும், குழந்தையும் பலி

அப்போது ஆற்காடு அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை பகுதியில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வாகனத்தில் சென்ற ஷாயீன் மற்றும் அவரது மகன் சுபான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தந்தையான தஸ்கீரும், மற்றொரு மகனான இப்ராஹிம் ஆகியோர் சிறிய காய்களுடன் மீட்கப்பட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; தந்தையும் மகனும் உயிரிழந்த சேகம்

ABOUT THE AUTHOR

...view details