கூலி வேலைக்குச் செல்வோரை குறி வைக்கும் லாட்டரி கும்பல் - கண்டுகொள்ளாத போலீஸ்? வேலூர் மாநகர் வட்டத்திற்குட்பட்ட தோட்டப்பாளையம், விருதம்பட்டு, சி.எம்.சி அருகே உள்ள காந்திரோடு பகுதியில் 3-நம்பர் காட்டன் சூதாட்டம் கொடிகட்டி பறந்து வருவதாக கூறப்படுகிறது. தினமும் காலையிலேயே, தொடங்கும் இந்த 3-நம்பர் காட்டன் விற்பனையில், பல லட்சம் ரூபாய் தினமும் புழங்கி வருகிறது.
தோட்டப்பாளையம் பகுதியில், அதிகளவில் வேலைகள் நடைபெறுவதால் அங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினந்தோறும் இந்த காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் தின வருமானத்தையும் இழந்து வருகிறனர். இந்த சூதாட்டத்தின் முடிவுகள் 1-மணி நேரத்திற்கு, ஒருமுறை வெளியிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
காட்டன் சூதாட்டம் விற்பனை மதியம் 1.30 மணிக்கு மேல் தான் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் இப்பகுதியில் பார்த்தால் நூற்றுக்கணக்கான கூலித்தொழிலாளிகள், தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு, அந்த தெருவில் சென்று 3-நம்பர் காட்டன் லாட்டரி சீட்டுகளை, அங்கு இருக்கும் ஏஜென்ட்களிடம் மாறிமாறி எழுதிவிட்டுச் செல்கின்றனர்.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் நடத்தப்படும் காட்டன் சூதாட்டத்தை செஞ்சி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவரும் அவரது கூட்டாளிகள் 10க்கும் மேற்பட்டவர்களும் நடத்தி வருகின்றனர். அதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள காட்டன் சூதாட்டத்திற்கு முத்துசாமி என்பவர் தலைவராக இருந்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் தங்களிடம் எழுதவரும் நபர்களிடம், பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணம் பெறுகின்றனர். அப்போது, ஒரு துண்டு சீட்டில் அவர்கள் எழுதும் என்னை குறித்து கொடுக்கின்றனர். நெடுஞ்சாலையிலிருந்து அந்த தெருவிற்குள்ளே நுழையும் தெருவின் முகப்பில் உள்ள கடைகளில் அந்த ஏஜென்ட்களின் ஆள்கள் அமர்ந்து கொண்டு, அதிகாரிகள் யாராவது வந்தால் ஏஜென்டுகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுபோல் நடைபெறும் 3- நம்பர் காட்டன் லாட்டரி சீட்டுகளுக்கு பலர் அடிமையாகி, எண்களை எழுதி, நம்பி நாளென்றுக்கு லட்சக் கணக்கில் பணத்தை இழக்கின்றனர். குறிப்பாக, தினக்கூலி, வேலைக்கு செல்வோர் லாட்டரி மோகத்தில் சீரழிகின்றனர். 3-நம்பர் காட்டன் சூதாட்டம் நடப்பது காவல் துறையினருக்கும் நன்றாகவே தெரியும். தெரிந்தும் அவர்களுக்கு கணிசமான தொகை, இந்த சூதாட்ட கும்பலிடம் இருந்து வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் ஆதரவோடு சூதாட்டம் நடப்பதால், போலீஸ் ஆதரவு இருக்கும் வரை, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற தொனியில் தெம்பாக காட்டன் சூதாட்டதை நடத்தி வருகிறது, அந்த கும்பல். இது குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தெரிவித்தும் கவனிப்பு அதிகமாக இருப்பதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். போலீஸ் ஆதரவு இருப்பதால் வேலூர் மாநகர், தோட்டப்பாளையம் பகுதியில் இது போன்ற சட்டமீறல்கள் சகஜமாகிவிட்டன.
இதனால், பாதிக்கப்படுவது அப்பாவி கூலித் தொழிலாளர்கள் தான்; எனவே, காவல் துறை உயர் அதிகாரிகள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி காட்டன் லாட்டரி விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கும்பகோணம் மாநகராட்சி திமுக - காங். கவுன்சிலர்கள் இடையே மோதல்!