வேலூர்: மாநகராட்சி தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (30). இவர் வேலப்பாடி ஆரணி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த 7 தேதி தனது சொந்த செலவிற்காக நகைகளை அடமானம் வைக்கச் சென்றுள்ளார். அப்போது லோகேஷ் குமாரிடம் இருந்த 15 சவரன் நகையுடன் இருந்த பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட வேலூர் தெற்கு போலீசார் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், திருச்சியைச் சேர்ந்த ராஜசேகர் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சுதாகர் என்பவரைத் தேடி வருகின்றனர். கைது செய்த மூவரையும் போலீசார் விசாரித்த போது அவர்கள் ஏற்கனவே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற பழைய குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் நான்கு பேரும் வேறு வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் சேலம் சிறைச்சாலையில் ஒன்றாக இருந்த போது நட்பாகி உள்ளனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கி சென்ற போது வேலூர் வேலப்பாடி இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்களை நோட்டமிட்டு இருந்துள்ளனர்.
அப்போது தன் நகையை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் சென்ற லோகேஷ் குமார் வங்கி நகை மதிப்பீட்டாளரிடம் நகையை வைத்து இரண்டு லட்சம் கேட்டுள்ளார். ஆனால் அந்த நகைக்கு நகை மதிப்பீட்டாளர் ஒன்றரை லட்சம் தான் தர முடியும் என்று கூறியுள்ளார். இதனால் லோகேஷ் நகையுடன் வெளியே வந்துள்ளார். இதனை வங்கியில் நோட்டமிட்ட கொள்ளையர்கள் லோகேஷ் குமாரை பின் தொடர்ந்து வங்கியின் வாசலில் வைத்து லோகேஷ் குமாரிடம் இருந்த நகை பையைக் கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
கொள்ளையடித்துச் சென்றவர்கள் சிறிது தூரம் சென்ற போது இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதால் வாகனத்தை அங்கே விட்டு சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெற்கு காவல் நிலைய போலீசார் இருசக்கர வாகனத்தை மீட்டு, தடயவியல் நிபுணரை வரவழைத்து கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் சேலம் சென்று அங்கு தலைமறைவாக தங்கி இருந்தனர்.
போலீசார் தடயவியல் நிபுணர்கள் மூலம் சேகரித்து கைரேகையை வைத்து சேலத்தில் பதுங்கி இருந்த செந்தில், ஈஸ்வரன், ராஜசேகர் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்ற சுதாகர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை.. நாமக்கல் பகீர் சம்பவம்!