வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்திற்கும் மண்டி தெருவுக்கும் இடைப்பட்ட தெருவில் அரசுக்குச் சொந்தமான 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு விதிகளின்படி, அரசு டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஆனால், அரசின் திறப்பு நேரம் முடிவடைந்த பின்னர், இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள உணவு பண்டங்கள் விற்கும் கடையில் மதுபான விற்பனை தொடங்குகிறது.
அப்போது இந்த மது விற்பனை, அரசு டாஸ்மாக் மூடப்படும் இரவு 10 மணி முதல் மறுநாள் திறக்கப்படும் மதியம் 12 மணி வரை இரவு பகலாக தொடர்ந்து அரசின் விதிகளை மீறி இயங்கி வருகிறது. இதில் அரசு டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தைக் காட்டிலும், விதிகளை மீறி இயங்கி வரும் கடை அதிக நேரம் செயல்படுவதாக கூறப்படுகிறது.