வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பீஞ்சமந்தை, ஜார்தான் கொல்லை, பலாம்பட்டு, நிம்மங்காணாறு, பன்னிக்குட்டி பள்ளம், கங்காச்சரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் எந்த அளவிற்கு விவசாயம் நடக்கிறதோ அதை விட பல மடங்கு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அடர்ந்த மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல், அதனை இரவு நேரங்களில் பைக் மூலம் லாரி டியூப்களில் கட்டி கொல்லமங்கலம், கரடிகுடி, தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கள்ளச்சாராய கும்பலை பிடிக்க வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 165 காவலர்கள் வேப்பங்குப்பம், அணைக்கட்டு, அரியூர் பேரணாம்பட்டு, குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலை பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.