வேலூர்:தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் ஈர நிலபரப்பில் வாழும் பறவைகள் மற்றும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து நடப்பாண்டில், ஈரநிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மாநில அளவில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்டது. வேலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 20 இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது.
ஒவ்வொரு இடங்களில் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த பறவை ஆர்வலர்கள், சுமார் 3 வன ஊழியர்கள் என 40 இடங்களிலும் சேர்த்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். அப்போது, காப்புக்காடு, ஊர்ப்புறங்களில் காணும் பறவைகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்தும், வீடியோவாகப் பதிவு செய்து கணக்கிட்டனர்.