வேலூர்: காட்பாடியில் இருந்து வள்ளிமலை செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த மின்வாரிய அலுவலகம் இயங்கும் கட்டடம், தனிநபரான காட்பாடி குமரப்பா நகரைச் சேர்ந்த எஸ்.லிடியா சரோஜினி என்பவருக்குச் சொந்தமானது. தமிழ்நாடு அரசின் மின்வாரிய அலுவலகம் செயல்படும் கட்டடத்துக்கு மாத வாடகையாக 2,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர் பூட்டுப் போட்டுச் சென்றதால் பரபரப்பு இந்த நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையை முறையாக செலுத்தி வந்த மின்வாரிய அலுவலகம், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் கட்டடத்தின் உரிமையாளரான எஸ்.லிடியா சரோஜினி, வாடகையை முறையாக செலுத்தும்படி காட்பாடி மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை கூறி வந்துள்ளார்.
இருப்பினும், மின்வாரிய அலுவலகம் தரப்பில், இதுவரை நிலுவை வாடகை செலுத்தப்படவில்லை. இந்த நிலையில் பொறுமை இழந்த கட்டடத்தின் உரிமையாளர் லிடியா சரோஜினி, இன்று (மார்ச் 4) காலை காட்பாடி மின்வாரிய அலுவலக கட்டடத்துக்கு பூட்டு போட்டு விட்டுச் சென்று விட்டார். இதனையடுத்து, காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு பூட்டு போட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மின்வாரிய அலுவலர்கள், அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர். அதேநேரம் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகம் பூட்டி இருந்ததைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “நாங்கள் மின்கட்டணம் செலுத்துவதற்காக இன்று காலை மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தோம்.
ஆனால், மின்வாரிய அலுவலகம் பூட்டி உள்ளது. இன்றுதான் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள். இன்று மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அபராதத் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், இங்கு நிலவும் சூழ்நிலையில், நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை” என வேதனை தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்பாடி காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு அரசு அலுவலகத்திற்கு முறையாக சொந்த கட்டடம் இல்லாமல் இருப்பதாகவும், முறையாக வாடகையை செலுத்தாமல் இருந்ததால் இந்த நிலைமையில் மின்வாரிய அலுவலகம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முறையான நிதி ஒதுக்கி மின்வாரிய அலுவலகத்தை காட்பாடியில் கட்ட வேண்டும் எனவும், அதுவரை அலுவலகம் செயல்படும் கட்டடத்திற்கு மின்வாரிய அலுவலர்கள் முறையாக வாடகை செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:"வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் இந்தியாவுக்கு எதிரானவர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்!