வேலூர்:வேலூர் மாவட்ட திராவிடர் கழக சார்பில் நடத்தும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டமானது குடியாத்தத்தில் இன்று (ஆக.28) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேடையில் பேசும்போது, “பொதுக்கூட்டம் தொடங்கியபோது மேடையில் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது இல்லை இதுபோன்ற நிலைதான் பாஜகவும், ஆர்எஸ்எஸ் கட்சியும் என்றார். பெரியார் மண்ணில் இவைகள் எல்லாம் நிலைக்காது; அந்த நேரத்தில் மட்டும் தொல்லையாக இருக்கும், இதுபோன்று நாங்கள் எத்தனையோ பார்த்திருக்கோம்” என்று கூறினார்.
போனியாகாத அண்ணாமலையின் கடைப்பயணம்:பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை குறித்த கேள்விக்கு, போனியாகாத பாஜகவின் கடைப்பயணம்; பொய்க்கால் குதிரை ஆட்டமாக இருக்குமே தவிர, உண்மை குதிரையாக இருக்க முடியாது என்று சாடினார். தமிழ்நாட்டில் இருக்கிற 'திராவிட மாடல் ஆட்சி' என்பது ஒரு ரேஸ் குதிரை போன்றது. ரேஸ் குதிரைக்கும், பொய்க்கால் குதிரைக்கும் இடமில்லை எனவும், ஆளுநராக இருப்பவர் அரசியல் சட்டப் பிரமாணத்திற்கு நேர் விரோதமாகவும், மக்கள் நலனுக்கு விரோதமாகவும் நடந்து கொள்கிறார்.
சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்:மேலும், அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முடியாது எனவும், 13 கோப்புகளில் கையெழுத்திடாமல் உள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேவையில்லாமல் பல பல்கலைக்கழக பிரச்னைகளில் தலையிடுகிறார் எனவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 13 சட்ட மசோதாக்கள், சட்ட வரைவுகளை நிறைவேற்றினால்தான் ஆட்சி சக்கரம் சுழல முடியும் எனவும், ஆளுநர் பொதுவாக எது அரசாங்கத்திடம் இருந்துபோனாலும் அதை நிறுத்த என்ன செய்யலாம்? என யோசித்து கொண்டு இருப்பதாக வீரமணி குற்றம்சாட்டினார்.