சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டை பகுதியிலிருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் குடிநீர் எடுத்துச் செல்லப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர், 50 வேகன்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், கூடுதலாக 50 வேகன்கள் கொண்ட ரயில் நடைமுறைக்கு வந்தது. எனினும் இன்றுவரை 3.75 கோடி லிட்டர் தண்ணீர்தான் சென்னைக்கு அனுப்பப்பட்டது.
50 வேகன்களில் குடிநீர் நிரப்ப ஐந்து மணி நேரம் ஆகின்றது. ஆகவே, இந்த கால தாமதத்தை குறைக்க என்ன வழி என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குனர் நிர்மல் ராஜ் மற்றும் மேற்பார்வை பொறியாளர் திலீபன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேட்டு சக்கரக்குப்பம் பகுதியில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம்வரை தண்ணீர் கொண்டுசெல்ல 17 வளைவு கொண்ட பெண்டு பைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனை, ஆறு பெண்டுகளாக குறைத்து 3 மணி நேரங்களில் 50 வேகன்களில் தண்ணீர் நிரப்ப வழிவகுக்கலாம் என்று கூறி அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.