வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் கனரா வங்கி மேலாளர் தயாநிதி என்பவர் வசித்துவருகிறார். இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் திடீரென தயாநிதி வீட்டிற்கு வருமானவரித்துறை அலுவலர்கள் சென்றனர். வீட்டில் இருந்த நபர்களிடம் தாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வந்திருக்கிறோம் எனவும், வீட்டில் சோதனை செய்ய ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஏழு பேர் கொண்ட வருமான வரித்துறை அலுவலர்கள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். அவர்களுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு காட்பாடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஆவணங்கள் எதுவுமின்றி ஏடிஎம் எந்திரத்திற்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்டது என்று தகவல் வெளியானது. அதனடிப்படையில் வங்கி மேலாளர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.