ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்):பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்கள், பேருந்துகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து விலை உயர்ந்த செல்போன்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றை திருடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை ராஜஸ்தான் மாநிலம், பஜாஜ் நகர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 45 விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்கள், 10 மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், எஸ். காமராஜ் (42). இவர் தனது கிராமத்தைச் சேர்ந்த சக்தவில், சந்தோஷ், கோகுல், தியாகராஜன் ஆகிய நான்கு இளைஞர்களை ஜெய்ப்பூருக்கு வரவழைத்து, ஒரு திருட்டு குழுவை உருவாக்குகிறார். 18 முதல் 24 வயதுடைய இளைஞர்களைப் பயன்படுத்தி விலை உயர்ந்த ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட்டுகளை திருடி வந்துள்ளார். இவர்களுக்கென தனி அறை எடுத்து தங்கவைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார்.
காமராஜின் உத்தரவின்பேரில் அந்த இளைஞர்கள் ஜெய்ப்பூரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் மாணவர்கள் தங்கும் விடுதிகள், பேருந்துகள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான செல்போன்கள், மடிக்கணினிகளை திருடியுள்ளனர். அவ்வாறு திருடப்பட்ட பொருள்களை கும்பலின் தலைவர் காமராஜிடம் கொடுத்து வந்தனர்.