வேலூர்: வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் புதை சாக்கடைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, வேலூர் - ஆற்காடு சாலையில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வேலூர் மாநகராட்சியில் 'பொலிவுறு நகர்' திட்டத்தின் கீழ் மாநகரில் உள்ள பல்வேறு வார்டுகளில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில், வேலூர் - ஆற்காடு சாலையை ஒட்டி உள்ள காகிதப் பட்டறை பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன. இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அந்த சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக சாலை மொத்தமும் குண்டும், குழியுமாக மாறியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் இந்த பகுதி வழியாக செல்லும்போது பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, இந்த பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளதால் அந்த மருத்துவமனைக்கு வெளி மாநிலத்தில் இருந்து நாள்தோறும் அதிகப்படியான நபர்கள் வந்து செல்கின்றனர். மேலும், இந்த சாலையில் பல முறை போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.