வேலூர்: பள்ளிக்கல்வி துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் வேலூர் மத்திய சிறை உள்பட 8 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட சிறைகளில் ஆயிரத்து 728 பேருக்கு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் மத்திய சிறையில் இத்திட்டத்தின் தொடக்கம் மற்றும் தன்னார்வலர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி தொடக்க விழா ஆகியவை நேற்று (செப். 17) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்க இயக்குநர் மு.பழனிச்சாமி வரவேற்று பேசினார். வேலூர் சிறைத்துறை துணைத்தலைவர் ஆர்.ராஜலட்சுமி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றனர்.
சிறை கைதிகளுக்கான எழுத்தறிவு திட்டம் மற்றும் பயிற்சியை துவங்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கண்டு கொள்ளவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டு அவர்களின் வாழ்க்கை மேம்பட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சிறைவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளை காணச் செல்லும்போது பழங்கள், மருந்துகள் வாங்கிச் செல்வது போல் சிறைவாசிகளுக்கு எழுத்தறிவுத் திட்டத்தையும், புத்தகங்களையும் அளித்துள்ளோம்.
புத்தகங்கள் மூலம் உலகை அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து புத்தகங்கள் வாசிப்பதால் சமூகம் மீதான அவர்களின் பார்வை மாறும். எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூலம் மனம் உறுதி பெறும். தொடர்ந்து கல்வி கற்பதன் மூலம் சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர்கள் நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "இந்த வேலூர் சிறையில் நானும், என்னுடன் சேர்ந்த 189 பேரும் மிசா கைதிகளாக இருந்தோம். எனவே இங்கு மலரும் நினைவுகளுடன் நுழைகிறேன். மேலும் 47 வருடங்களுக்கு பின்னர் இந்த சிறைக்கு வந்துள்ளேன்.
வேலூர் சிறை மிகவும் ராயலான சிறை. இந்த சிறைக்கு இணையாக வேறு சிறை எதுவும் கிடையாது. பெரிய அளவிலான நூலகமும், நல்ல காற்றோட்டத்துடன் கூடிய மருத்துவமனையும் இங்கு இருந்தது. மேலும் மிகப்பெரிய நூலகங்களில் காணமுடியாத நூல்கள் கூட இங்கு கிடைக்கும். இந்த சிறையில் உள்ள எல்லா புத்தகங்களிலும் சி.என்.அண்ணாதுரை என்று இருக்கும். ஏனெனில் அவர் 3 மாதங்கள் இங்கு இருந்தார்.
எல்லா புத்தகங்களையும் படித்துள்ளார். நாங்கள் சென்றால் ஒரு புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அதை படித்தாயா? என்று கேட்பார். வேலூர் சிறையின் நூலகம் என்பது மிகப்பெரிய பொக்கிஷம். கைதிகளாக இருப்பவர்களும் மனிதர்கள் தான். கணநேர கோபம் தான் அவர்களை தவறு செய்ய வைத்து விடுகிறது, அதனை இங்கு திருத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். சிறைச்சாலை என்பது தண்டனைக் கூடம் அல்ல, அது ஞானம் தரக்கூடியது" என்று கூறினார்.
இதையும் படிங்க: "தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது" - மு.க.ஸ்டாலின் சூசகம்!