தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்திகை தீப திருவிழா : வேலூர் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த வள்ளிமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

in Vellore District Special Puja at Murugan Temple on Karthigai Deepam Day
கார்த்திகை தீப நாளில் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 7:54 PM IST

கார்த்திகை தீப நாளில் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

வேலூர்: வள்ளிமலை முருகன் மலைக் கோயிலில், கார்த்திகை தீபம் கிருத்திகையையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மலைக்கோயில் உள்ள வள்ளி, தெய்வானை சமய சுப்ரமணியசாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் தனி சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி அம்மைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. கீழ் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சம்மத ஆறுமுகசாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அரோகரா கோசமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். மாலையில் கோயில் உட்பிரகாரத்தில் தேர் உற்சவம் நடைபெற்றது.

இக்கோயிலின் சிறப்பு அம்சம்:வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன.

யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள். இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும். படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நுழைவாயிலில் உள்ள ஒரு சந்நதியில் வள்ளி அம்மன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்திற்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லும் போது சாதாரண உயரம் கொண்டவர்களும் குணிந்துதான் செல்ல வேண்டும்.

அவ்வளவு தாழ்வான நுழைவாயிலை அடுத்து முருகன் கர்ப்பகிரகம் காட்சி அளிக்கிறது. மேலே பார்த்தால் பாறை எங்கே நமது தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சம் உருவாகிறது. பாறைகளைக் குடைந்து அதற்குள் முருகனை வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியிருக்கும் என்று பிரம்மிப்பாக உள்ளது.

எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்! "அரோகரா.. அரோகரா.." என பக்தர்கள் முழக்கம்!

ABOUT THE AUTHOR

...view details