வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கும் இவரது மூன்றாம் கணவர் முருகனுக்கும் கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், முருகன் காசநோயால் பாதிக்கப்பட்டு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய முருகன் குழந்தை குறித்து சத்யாவிடம் கேட்டபோது குழந்தையைக் காணவில்லை எனக்கூறி மழுப்பியுள்ளார். இதில் சந்தேகமடைந்த முருகன் வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் சத்யா, பெங்களூரு ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த ரஹமத், சகிலா தம்பதியினருக்கு குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றதாகவும், அதற்கான முன்பணமாக 65 ஆயிரத்தை பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு தனது பெரியம்மா கீதா, இடைத்தரகர் கவிதா உதவியதாகவும் தெரிவித்த அவர், பணத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை விற்று இரண்டு மாதம் ஆகிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.