வேலூர்: தமிழ்நாட்டின் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள், வெயிலின் தாக்கத்தால் ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை திறக்கப்படும் என்றும், ஜூன் 14ஆம் தேதி ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை திறக்கப்படும் என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஜூன் 12ஆம் தேதியான நேற்று 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது.
இந்த நிலையில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் 2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தொடங்கியது. பள்ளி தொடங்கி முதல் நாளில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 46 விலையில்லா பாடப் புத்தகங்களும் 7 லட்சத்து 11 ஆயிரத்து 357 நோட்டு புத்தகங்களும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க :அரசு கலை, அறிவியல் கல்லூரி கலந்தாய்வு: 40,287 மாணவர்கள் சேர்க்கை!
அதேநேரம், பள்ளி திறக்கும் முதல் நாளான இன்று, வேலூரில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களிடையே கலந்துரையாடி விட்டுச் சென்று விட்டார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பள்ளியில் 800 மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களும், நோட்டு புத்தங்களும் வழங்கப்பட்டன.
மேலும், இன்று முதல் நாள் பள்ளி என்பதால் பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டு உள்ளதா என்று மாணவர்களின் வகுப்பறையை சென்று ஆய்வு கூட செய்யாமல் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றது வேதனை அளித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், பள்ளி திறக்கப்படும் முன்பு பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த பொருட்களையும், அமரும் மேஜைகளையும், வகுப்பறையில் உள்ள தூசிகளையும் சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால், அரசின் அறிவுறுத்தலின்படி இந்தப் பள்ளி சுத்தமாக இல்லை என மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க:மருத்துவர் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு முறைக்கு எதிர்ப்பு: டாக்டர்கள் சங்கம் கூறும் காரணம் என்ன?