தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைக்கவசம் ஏன் முக்கியம்?  - சிறப்புக்கட்டுரை - சாலை பாதுகாப்பு விதிகள்

தரமான தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பயன் என்ன, அவற்றை மீறினால் என்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறித்து விவரிக்கிறது, இந்த சிறப்புத் தொகுப்பு.

importance-of-helmet-wearing-awareness
importance of helmet wearing awareness

By

Published : Jan 21, 2021, 9:33 PM IST

Updated : Jan 22, 2021, 3:36 PM IST

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சிக்னலை மதிக்காமல் செல்வது, தலைக் கவசம் அணியாமல் இருப்பது, லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் காலாவதியான பின்பும் புதுப்பிக்காமல் இருப்பது என பல்வேறு வழிகளில் சாலை விதிகளை மீறுகின்றனர். இதனால் வாகனத்தில் பயணிப்போர் மட்டுமின்றி, எதிரில் வாகனத்தில் பயணிப்போர், பாதசாரிகள் எனப் பலரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

இத்தகைய வகைகளில் சாலை விதிகளை மீறுவோரால் ஏற்படும் விபத்துகளில் பொதுச்சொத்துகள் சேதமடைவதுடன், படுகாயங்களும், உயிரிழப்புகளும் நிகழும் சூழல் உருவாகிறது. விபத்துக்களால் ஏற்படும் மரணங்களுக்குப் பிரதான காரணியாக அமைவது தலையில் ஏற்படும் காயங்களே.

இவை பெரும்பாலும் தலைக்கவசம் அணியாமல் செல்வதாலும், ஐஎஸ்ஐ தரமற்ற தலைக்கவசத்தை உபயோகிப்பதாலும் ஏற்படுகிறது. இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு தலைக்கவசங்களை இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவரும் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களே விபத்தின்போது அதிகளவு பாதிப்புகளைச் சந்திக்கின்றனர்.

இதுஒருபுறமிருக்க, இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெரும்பாலான இளைஞர்களைக் கவர பல்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்ட தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பயனாளர்களின் வசதிக்கேற்ப ஓபன் ஃபேஸ் ஹெல்மெட், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட், மாடுலார் ஹெல்மெட் என்ற வகைகளிலும் தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தலைக்கவசங்கள் அணிவது குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் ஈடிவி பாரத்திடம் விளக்குகிறார், அரசு மருத்துவர் பிரகாஷ் அய்யப்பன், " தலைக்கவசம் அணிவதால் சாலையில் வரும் பூச்சிகளிடமிருந்தும், காற்றில் பறக்கும் தூசிகளிடமிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தலைக் கவசம் அணிவதனால் தலைப்பகுதியில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. விபத்து ஏற்படும்போது, தலையில் காயம் ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் கை, கால்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இத்தகைய நிலைமையில், அதிகபட்சமாக மூளை செயலிழந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகள் செயலிழந்தால், அவற்றை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், மூளையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல" என்கிறார்.

தலைக் கவசம் அணிவதால் மட்டுமே இத்தகைய விபத்துகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்க இயலாது. பல்வேறு வகைகளிலும், விலைகளிலும் தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தரமான தலைக்கவசங்களை அணிவதே வாகன ஓட்டிகளுக்குப் பாதுகாப்பை அளிக்கும். மேலும், முகத்தை முழுமையாக மூடிக்கொள்ளும் வகையிலான முகக் கவசங்களையும் பயன்படுத்தவேண்டும்.

இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 194(D)இன் படி ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால், அவருக்கு பழைய சட்டத்தின்படி 100 ரூபாய் அபராதமும், 2019 சட்டத் திருத்தத்தின்படி அதிகபட்சமாக ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்கள் சம்பந்தப்பட்ட நபருடைய ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்கிறார், வழக்கறிஞர் சீனிவாசன்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 'தலையில் வியர்வை வருகிறது. அணிந்துகொள்ள கடினமாக உள்ளது என்ற சிறிய காரணங்களுக்காக தலைக்கவசம் அணியாமல் நம் உயிரைப் பணயம் வைத்து வாகனத்தில் பயணிக்கிறோம்.

ஓட்டுநர் உரிமம் அற்றவர்களும், 18 வயதிற்கு உட்பட்டவர்களும் வாகனங்களை இயக்கக் கூடாது என்பது சட்டம். இதற்கான திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாகனம் இயக்கியவர்களின் காப்பாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.

தலைக்கவசம் ஏன் முக்கியம்?

இவற்றைத் தவிர்க்க 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்திய அரசாங்கமும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரித்து வருகிறது.

இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 238 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளது.

காவலர்களுக்கும், அபராதத்திற்கும் பயந்து தலைக்கவசம் அணியாமல் செல்வதை தவிர்த்து, வெளியில் சென்ற நாம், வீடு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பத்தை மனதில் வைத்து, வாகனங்களில் பயணிக்க வேண்டும். ஏனெனில், தலைக்கவசங்கள் நம்மை காப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விதை உண்டியல்; மண்ணை காக்கும் மாற்றுத்திறன் தொழிலாளி!

Last Updated : Jan 22, 2021, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details