தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

''வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தவறு செய்பவர்களை கம்பி எண்ண வைப்பேன்'' - வேலூர் மாவட்ட செய்தி

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தவறு செய்பவர்களை கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டேன் என அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 25, 2023, 6:45 PM IST

”வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தவறு செய்பவர்களை கம்பி எண்ண வைப்பேன்” - துரைமுருகன் எச்சரிக்கை!!

வேலூர்: காட்பாடி அடுத்த ஆரிமுத்து மோட்டூர் கிராமத்தில் இன்று அரசின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றார்.

இந்த முகாமில் 492 பேருக்கு 4 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டா, மற்றும் 50 புதிய குடும்ப அட்டைகள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம், முதியோர் ஓய்வுத் திட்டம், திருமண உதவித்தொகை, தையல் இயந்திரம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்குதல் உள்ளிட்ட 677 பயனாளிகளுக்கு 4.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ”காட்பாடி அடுத்த அம்முண்டியில் உள்ள வேலூர் சர்க்கரை ஆலையைக் கொண்டு வந்தது நான் தான். இதுவரை நான் உள்ளே போய் ஒரு துண்டு கரும்பைக் கூட சாப்பிட்டதில்லை. ஆனால், என்னுடைய பெயரைச் சொல்லி, என்னுடைய தயவால் வந்த மில்லில் சிலர் (ஆலையில்) கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இன்னும் ஒரு மாதம் அல்லது இரண்டரை மாதங்களில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தே தீருவேன். அதற்குப் பிறகு கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டேன்’’ என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ''நான் இந்த தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல. இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட திமுக என்ற ஒரு மிகப் பெரிய கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர். கட்சியில் யாரை நீக்க வேண்டும் யாரை சேர்க்க வேண்டும் என நான் தான் கையெழுத்துப் போட வேண்டும்.

அதேபோல வருமானவரித்துறைக்கு நான் தான் கணக்கு கொடுக்க வேண்டும். கட்சி சார்பாக சொத்து வாங்குவது என்றாலும் என் பெயரில் தான் வாங்க வேண்டும். இதுபோக, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறுகளையும் நான் கவனிக்க வேண்டியதாக உள்ளது. இப்படி மிகுந்த பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் எனது தொகுதிக்குத் தேவையான பணிகளை செய்து வருகிறேன்.

மகளிர் பயணிக்க இலவசப் பேருந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் என குற்றம்குறை இல்லாமல் இந்த அரசு நடைபெற்று வருகிறது'' எனப் பேசினார்.

பெண்களுக்கு மாதம் ஆயிரமும், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரமும் வழங்குவது குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ”கல்லூரி மாணவிகள் தாய்மார்களிடம் எதற்கும் பணம் கேட்க வேண்டாம். சினிமாவுக்கு போகவும் சரி, செல்போன் வாங்கவும் சரி, அதை வைத்து நைசாக பேசவும் சரி. எதற்கும் யாரையும் நம்பி இருக்காத சூழல் உருவாகி உள்ளது’’ என்றார்.

அதேபோல அமைச்சர் துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கும்போது அருகே இருந்த ஒரு கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒலிக்கும் அலாரம் ஒலித்தது. இதைக் கேட்ட துரைமுருகன் "இது யாருப்பா அது. சரி அது சரி. இங்க இப்ப இதெல்லாம் வந்திருச்சா" எனக் கூறினார். நீண்ட நேரம் அந்த பாடல் ஒலித்ததால் "அட யார்ரா அவன் கொஞ்சம் அமைதியா இருடா" எனப் பேசினார். இது பொதுமக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "ஸ்டாலினை தோளில் சுமப்பதில் வெட்கமில்லை" - அமைச்சர் துரைமுருகன் உணர்ச்சி பொங்க விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details