வேலூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.வ.வேலு, திமுக பொருளாளர் துரைமுருகன், வேலூர் மக்களவை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தனக்கு எதிராக யார் சதி செய்தார்கள் என்பதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை என்றும், பல்வேறு துரோகங்களை சமீபத்தில் சந்தித்ததாகவும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.
அத்துடன், அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் பணம் பதுக்கி வைத்து, வருமான வரித்துறையினரைக் கொண்டுவந்து தன் வீட்டில் உட்கார வைத்தது யார்? ஒரு நபரை வைத்து தன் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது யார்? இப்போது செய்யும் தேர்தல் செலவைக் கணக்கிட எங்கள் வீட்டில் ஓய்வு பெற்ற அதிகாரியை பணியில் அமர்த்தியது யார்? தங்கள் வீட்டின் வேலைக்காரர்களிடம் ரகசியமாக தொலைபேசி கொடுத்தவர் யார்? தன் ஒரே மகனைப் பற்றி பேசிய அந்த எதிரி யார்? மொத்தத்தில் தனக்கு இத்தனை துரோகங்களை இழைத்தது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர் தனக்கு எல்லாமே தெரியும் என தொண்டர்களிடையே கண்ணீர் மல்க பேசினார்.
துரைமுருகனின் ஆவேச பேச்சு இறுதியாக எத்தனை துரோகம் தனக்கு எதிராக அரங்கேறினாலும், தானும் தனது மகனும் இறுதிவரை திமுகவிற்காகவே உழைப்போம் என்று ஆவேசமாகப் பேசினார்.