வேலூர்மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (40). இவரது மனைவி அமுல் (30) இந்த தம்பதியினருக்கு இரு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
இந்த தம்பதியினர், அதே பகுதியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்.18) இரவு செங்கல் சூளையைப் பற்ற வைத்து விட்டு வெளியில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், திடீரென கனமழை பெய்ததால் செங்கல் சூளையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் இருவரும் தங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (செப். 19) அதிகாலை உறவினர்கள் சென்று பார்த்த போது இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். செங்கல் சூளை அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கொட்டகைக்குள் தங்கியதால் மழையின் காரணமாக அதிகமான புகை ஏற்பட்டு உறக்கத்திலே மூச்சுத் திணறி ஏற்பட்டு இருவரும் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், வேலூர் தாலுகா காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் நடத்தி வந்த செங்கல் சூளைக்கு உரிய அனுமதி உள்ளதா? என்று வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
உயிரிழந்த தம்பதியினர் சொந்த வீடு இல்லாத ஏழ்மை நிலையில் இருப்பதால் மூன்று பிள்ளைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மூத்த மகள் சந்தியா கூறுகையில், ‘நேற்று இரவு வரை நாங்கள் பெற்றோருடன் தான் இருந்தோம், எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் அங்கேயே தங்கினர்.
நாங்கள் வீட்டுக்கு சென்றதும் எங்களை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு பேசினர். ஆனால் காலையில் எங்கள் பெற்றோர்கள் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். எங்களுக்கு யாரும் இல்லை மூன்று பேர் என்ன செய்வது என தெரியவில்லை என்றும், அரசு உதவ வேண்டும்’ எனக் வருத்தத்துடன் கூறினார்.
இதையும் படிங்க:கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றிய இந்தியா; இந்தியா - கனடா நட்புறவில் பதற்றம்!