வேலூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பாப்பா (60). இவர், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (மே.22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல அவருடைய உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியைப் பதிவு செய்த நிலையில், எட்டு மணி நேரம் அமரர் ஊர்தி வராததால் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். மேலும், சின்ன பாப்பாவின் உடல் சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக வார்டிலிருந்து அகற்றப்படாமலேயே இருந்தது.
தொடர்ந்து, சின்ன பாப்பாவின் உறவினர்கள், வார்டில் உள்ள நோயாளிகள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்பு பிணவறைக்கு அவரது உடல் மாற்றப்பட்டது. தொடர்ந்து உறவினர்களின் நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு சுமார் எட்டு மணி நேரம் தாமதமாக அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பருகூர் கொண்டு செல்லப்பட்டது.