வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் இதுவரை 30 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு மருந்து இல்லாத நேரத்திலும் அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் 80 விழுக்காடு மக்கள் குணமடைந்து வருகின்றனர். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் உயிரிழக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் 129 இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதேபோன்று விரைவில் ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் புதிதாக கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். கரோனா பாதிப்பாளர்களுக்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அலோபதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிளாஸ்மா சிகிச்சையால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.