தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, டெங்கு கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. டெங்கு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
வேலூர் மாவட்டத்தில் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது. இந்த டெங்கு காய்ச்சல் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகளவு தாக்குகிறது. இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்காக குழந்தைகள் தனிப் பிரிவில் சிறப்பு வார்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் அரசுக்கு அவப்பெயர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இருப்பதை நேரடியாக ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.