வேலூர்: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகள் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கியுள்ளதா? அப்படி நிதி வழங்கியிருந்தால் அதன் விவரங்கள் என்ன? கடந்த ஐந்தாண்டுகளில் ஆண்டு வாரியாக ஒவ்வொன்றிலும் வழங்கப்பட்ட நிதிகள் இந்த நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதில் மத்திய அரசு பின்பற்றும் அளவுகோல்கள், விதிகள் மற்றும் நடைமுறைகள் யாவை? நாட்டிலுள்ள முதல் 10 மாநகராட்சிகள், முதல் 25 நகராட்சிகள், முதல் 50 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் முதல் 100 கிராமப் பஞ்சாயத்துகளின் தர வரிசைப் பட்டியல் விவரங்கள் என்ன? என வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துப் பூர்வமாக அளித்த பதில் விவரம்
”நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MOHUA) அதிகார வரம்புக்குட்பட்டதாகும். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதாகும்.
நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை அளித்த தகவலின்படி, மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்த மத்திய நிதி ஆயோக்களால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரண்டும் பகிர்ந்தளிக்க ரூ.19,936.58 கோடி மானியம் உதவி வழங்கப்பட்டது.