வேலூர்:ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த வேப்பூரில் உள்ள மிகப் பழமையான வசிஸ்டேஷ்வரர் ஆலயத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அதே பகுதியில் இருந்த 52 ஏக்கர் விவசாய நிலத்தை வக்புக்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் ஆணை வழங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்த பேசிய போது, 'தமிழ்நாட்டில் நடைபெறுவது ஸ்டாலின் அரசாங்கம் அல்ல, மாலிக் கபூர் அரசாங்கம். நாடு முழுவதும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை போல 7 மடங்கு கொண்ட சுமார் ரூ.12.5 லட்சம் கோடி மதிப்பிலான நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என அபகரிக்கப்பட்டுள்ளன.
வேப்பூர் கிராமத்தில் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பெற்று, விவசாயிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 52 ஏக்கர் விளைநிலத்தை, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என வழங்கி மாவட்ட நிர்வாகம் தவறு செய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நிலத்தை மீட்டு விவசாயிகளிடம் வழங்கவில்லை என்றால், பாஜக சார்பில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்’ என எச்சரித்தார்.